வாஷிங்டன் டி.சி, ஏப்ரல் 7 - அமெரிக்க அதிபர் டோனல் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நாட்டு தலைநகர் வாஷிங்டனில் மட்டும் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள வாஷிங்டன் நினைவுச் சின்னத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
அரசியலமைப்பை அதிகாரிகள் நிலைநிறுத்த வேண்டும் என்றும், டிரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியும் பல்வேறு பதாகைகளை அவர்கள் ஏந்தி சென்றனர்.
"ஜனநாயகத்தில் கை வைக்காதீர்கள் மற்றும் 'அதிகாரமீறலை நிறுத்துங்கள்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு அவர்கள் தங்கள் எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தினர்.
டிரம்ப் மட்டுமின்றி அவரது நெருங்கிய ஆலோசகரான, பிரபல கோடீஸ்வரரும் மின்சார கார் நிறுவனமான டெஸ்லா தலைவருமான எலான் மஸ்க் ஆகிய இருவருக்கும் எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நியூயார்க்கில் பேரணி நடத்தினர்.
பதவியேற்றது முதல், மஸ்க்கின் உதவியுடன் அரசாங்க கட்டமைப்பை டிரம்ப் தீவிரமாக மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் பல கூட்டரசு அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்தது உட்பட கல்வித் துறை போன்ற பல முக்கிய நிறுவனங்களை டிரம்ப் கலைத்துள்ளார்.
பெர்னாமா


