ஷா ஆலம், ஏப். 7 - கடந்த வாரம் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீவிபத்தில்
வீடுகள் முற்றாக அழிந்த 81 குடியிருப்பாளர்களுக்கு உடனடி உதவித்
தொகையாக தலா 10,000 வெள்ளி வழங்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 வெள்ளி உதவித் தொகையை மத்தியஅரசும் எஞ்சியத் தொகையை பெட்ரோனாஸ் நிறுவனமும் வழங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த தீவிபத்தில் மேலும் 81 வீடுகள் ஒரு பகுதி சேதமடைந்துள்ள
வேளையில் தீயில் எரியாத, ஆனால் பாதிக்கபட்ட 57 வீடுகளின்
உரிமையாளர்களுக்கு தலா 5,000 வெள்ளி வழங்கப்படும். அந்த வீடுகளில்
வாடகைக்கு இருந்தவர்களும் இதே தொகையை பெறுவர் என்று அவர்
சொன்னார்.
இது உடனடி உதவி நடவடிக்கையாக விளங்குகிறது. பாதிக்கப்பட்ட
அனைத்து 219 குடும்பங்களுக்கும் இன்று தொடங்கி உதவித் தொகை
விநியோகிக்கப்படும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நிதியை பகிர்ந்தளிக்க
இயலும் என நம்புகிறோம் என்று அவர் இங்குள்ள அன்னெக்ஸ்
கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மேற்கொண்ட ஆய்வில் இங்குள்ள
மொத்தம் 437 வீடுகள் சேதடைந்துள்ளன. முற்றாக அழிந்தவை. ஒரு பகுதி
சேதமடைந்தவை மற்றும் தீயின் தாக்கத்தால் பாதிக்கபட்டவை என
மூன்று பிரிவுகளாக சேதம் மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
வசிப்பதற்கு பாதுகாப்பானவை என 151 வீடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ள
வேளையில் அவ்வீடுகளில் மீண்டும் குடியேற அதன் உரிமையாளர்கள்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
சம்பவ தினத்தன்று தீயணைப்பு வீர ர்கள் மேற்கொண்ட துரித
நடவடிக்கையால் 28 கோடியே 90 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துகள்
சேதமடைவதிலிருந்து காப்பாற்றப்பட்டதாக அமிருடின் மேலும் சொன்னார்.


