புத்ராஜெயா, ஏப். 7 - நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்கள் உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக மலேசியாவும் ஆசியான் நாடுகளும் ஒன்றிணைந்து அமெரிக்கா அறிவித்த வரிகள் குறித்து ஓர் ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் வரி அறிவிப்பு சந்தேகத்திற்குரிய அடித்தளங்களைக் கொண்டிருந்தாலும் ஆசியான் நாடுகள் இந்த விஷயத்தை குறிப்பாக, தற்போதைய நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலில் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
நேற்று, அமெரிக்க வரிகளைக் கையாள்வது தொடர்பான சிறப்புக் குழு கூட்டத்தின் முடிவை நேற்று நான் விரிவாக விளக்கினேன். அதில் அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. முன்பு சுயேச்சை வர்த்தக உணர்வை ஆதரித்து உலக வர்த்தக நிறுவனம் (டபள்யு.டி.ஒ.) மற்றும் வரி மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம் (ஜி.ஏ.டி.டி.) ஆகியவற்றை நிறுவிய அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் இப்போது வேறுபட்ட அணுகுமுறையை எடுத்து வருவது விநோதமானதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்
மிகவும் பலவீனமான காரணங்களை அடிப்படையாகக் கொண்ட வரி அறிவிப்புகள் உட்பட அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் எதிர்பாராத விதமாக செயல்படுத்தப்படும் போது "இயல்புக்கு பிந்தைய காலம்" என்று நான் கூறுவது இதனைத்தான் என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு பிரதமர் துறை ஊழியர்களான சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
அமெரிக்க நிர்வாகம் வரியை குறைபாடான வகையில் நிர்ணயித்த முறையில் விவரித்த அன்வார், இந்த வரி விதிப்பில் சில சிறிய தீவுகள் சேர்க்கப்பட்டிருப்பினும் அவற்றில் பெங்குயின்கள் மட்டுமே வசிக்கின்றன என்று குறிப்பிட்டார்.


