புத்ரா ஜெயா, ஏப். 7 - பல ட்ரிலியன் டாலர் இழப்பை பதிவு செய்த
அமெரிக்கச் சந்தையின் வீழ்ச்சி உள்ளிட்ட உலகளாவிய பொருளாதார
நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக மலேசியா தயார்
நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
நம்பிக்கையூட்டும் தரவுகளுடன் நாடு தொடர்ந்து வலுவான பொருளாதார
அடித்தளத்தைக் கொண்டிருந்தாலும் வரி விதிப்பு மற்றும்
அமெரிக்காவுடனான வர்த்தக உறவு உள்ளிட்ட எதிர்பாராத நிகழ்வுகள் மீது
உரிய கவனம் செலுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கான நமது ஏற்றுமதி மதிப்பு அதிகமானது. செமிகண்டக்டர்
ஏற்றுமதி மட்டும் 10,000 அமெரிக்க டாலரை எட்டும். நாட்டின் மொத்த
செமிகண்டக்டர் ஏற்றுமதியில் 65 விழுக்காட்டை இது பிரதிபலிக்கிறது.
அமெரிக்காவுடனான நமது வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்
தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்து வருகின்றன என்று அவர்
சொன்னார்.
ஆகவே, நாம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க
வேண்டும். மக்களை துன்புறுத்தக்கூடிய, வேலை வாயப்புகளைப் பறித்து
அவர்களுக்கு இன்னலை ஏற்படுத்தக்கூடிய எந்த பொருளாதார
கொள்கையையும் நாம் அமல்படுத்த விரும்பவில்லை என்று அவர்
தெரிவித்தார்.
இன்று பிரதமர் துறை பணியாளர்களுடனான சந்திப்பு நிகழ்வின்
போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் துணைப்
பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி மற்றும்
டத்தோஸ்ரீ பாடில்லா யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விவகாரத்தில் கூட்டு நிலைப்பாட்டை வரையறுப்பதற்காக ஆசியான்
வர்த்தக அமைச்சர்களுடனான சந்திப்பு ஒன்றை எதிர்வரும் வியாழக்கிழமை
நடத்துவதற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு
டத்தோஸ்ரீ ஜப்ருள் தெங்கு அஜிஸ் ஏற்பாடு செய்து வருவதாகப் பிரதமர்
குறிப்பிட்டார்.
சில ஆசியான் நாடுகளை திட்டமிட்டு இலக்காகக் கொண்ட புதிய வரி
விதிப்பு தொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்ப்
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அறிவித்தார்.


