கோலாலம்பூர், ஏப். 7- சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்து நிகழ்ந்து இன்றுடன் ஏழு நாட்கள் ஆன நிலையில், இந்த தீ விபத்து காரணமாக உருவான பள்ளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் தேங்கி நிற்கும் நீரை அகற்றும் பணியை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக அங்கு தேங்கியுள்ள நீரின் அளவு சற்று உயர்ந்துள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.
அப்பகுதியில் தேங்கி நிற்கும் நீரில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயினும் இப்போதைக்கு அனைத்துப் பணிகளும் சீராக நடைபெற்று வருகின்றன என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இதனிடையே, புத்ரா ஹைட்ஸ் சம்பவ இட கட்டுப்பாட்டுச் சாவடிக்கு தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் இன்று மாலை வருகை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும் சாத்தியம் கருதி சம்பவ இடத்தில் இரண்டு நீர் இறைக்கும் இயந்திரங்கள் எப்போதும் தயாராக இருப்பதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் பம்ப் எப்போதும் தமார் நிலையில் இருக்கும். இந்தப் பணியை ஒரே தடவையில் முடித்து விட முடியாது. மழை பெய்யும் போது அங்கு தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டியிருக்கும் என்று இன்று காலை பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு பெட்ரோனாஸ் எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 30 மீட்டருக்கும் அதிக உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன. வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது. தீயை அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது.
இந்த சம்பவத்தில் மொத்தம் 87 வீடுகள் வசிப்பதற்கு முடியாத அளவுக்கு முற்றிலும் சேதமடைந்தன. அதே நேரத்தில் 148 வீடுகள் ஒருபகுதி சேதமடைந்தன.
நேற்று வரை, பாதிக்கப்பட்ட 509 குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையங்களில் பதிவு செய்துள்ளன.


