கோலாலம்பூர், ஏப். 7 - ஜோகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில் உள்ள
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பைக் கண்டுள்ளது.
அதே சமயம், சபாவில் இன்று காலை வரை வெள்ள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி பத்து பஹாட் மாவட்டத்தில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 326 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
நேற்று மாலை 4.00 மணிக்கு இந்த எண்ணிக்கை 94 குடும்பங்களைச் சேர்ந்த 285 பேராக இருந்தது.
கம்போங் பாரு ஸ்ரீ காடிங் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் ஸ்ரீ காடிங் தேசிய பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
பத்து பஹாட்டில் உள்ள சுங்கை செங்காரங் ஆற்றின் நீர்மட்டம் தற்போது எச்சரிக்கை மட்டத்தில் 3.35 மீட்டராக உள்ளது. அதே நேரத்தில் சுங்கை பத்து பஹாட் ஆற்றில் நீர் மட்டம் 2.30 மீட்டராக் பதிவாகியுள்ளது என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
மூவார், சிகாமாட், குளுவாங், பத்து பஹாட், தங்காக் மற்றும் கூலாய் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இன்று காலை மழை பெய்யும். ஜோகூர் பாரு, மெர்சிங், பொந்தியான் மற்றும் கோத்தா திங்கி ஆகிய இடங்களில் வானிலை மேகமூட்டமாக இருக்கும்.
இதற்கிடையில், சபா மாநிலத்தின் கினாபாத்தாங்கான் மாவட்டத்தில் காலை 30 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு நான்கு கிராமங்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக சபா பேரிடர் மேலாண்மை நிறுவன செயலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.


