கோத்தா பாரு, ஏப். 7- தும்பாட், ஜாலான் குதான் சாலையில் நேற்றிரவு
நிகழ்ந்த இரு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில்
இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டியான 17 வயது இளைஞரும்
அதில் பயணம் செய்த 16 வயது இளைஞரும் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்த வேளையில் 53 வயதான மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி
காயமடைந்ததாக தும்பாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது
கைரி ஷாபி கூறினார்.
அவ்விரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பாசீர் பெக்கானிலிருந்து
பாசீர் மாஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து
நிகழ்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர்
சொன்னார்.
அவ்விரு இளைஞர்களும் சாகசம் புரியும் நோக்கில் ஒரு சக்கரத்தில்
மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவாறு கார் ஒன்றை முந்திச்
சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன்
அவர்களின் மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தின் எதிரொலியாக சாலையில் விழுந்த அவர்கள் தலையிலும்
உடலிலும் ஏற்பட்ட பலத்தக் காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சவப்பரிசோதனைக்காக
தும்பாட் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் காலில்
காயங்களுக்குள்ளான ஆடவர் ராஜா பெரெம்புவான் ஜைனாப் 11
மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாணை நடத்தப்பட்டு வருவதாக அவர்
மேலும் சொன்னார்.


