NATIONAL

நோன்புப் பெருநாள் சந்திப்பில் பிராந்திய விவகாரங்கள் குறித்து அன்வார்-பிராபோவோ பேச்சு

7 ஏப்ரல் 2025, 3:09 AM
நோன்புப் பெருநாள் சந்திப்பில் பிராந்திய விவகாரங்கள் குறித்து அன்வார்-பிராபோவோ பேச்சு

கோலாலம்பூர், ஏப். 7 - நோன்புப் பெருநாளை முன்னிட்டு நல்லெண்ண வருகை மேற்கொண்ட இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று முக்கிய பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

ஆசியான் நாடுகள் மீது அமெரிக்கா விதித்த புதிய வரிகள் குறித்தும் விவாதம் நடைபெற்றதாக அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்க பேரழிவால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான கூட்டு முயற்சிகள் குறித்தும் தாங்கள் விவாதித்ததாக அவர் கூறினார்.

எனது நீண்டகால நண்பரும் இந்தோனேசிய அதிபருமான பிரபோவோ சுபியாந்தோவுடன் நேற்று மாலை மரியாதை நிமித்தச் சந்திப்பை நடத்தினேன்.

அமைதி மற்றும் பிராந்திய செழிப்பு என்ற பெயரில் மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை நோன்புப் பெருநாள் உணர்வு தொடர்ந்து வலுப்படுத்தட்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பிரபோவோ மற்றும் அவரது பேராளர் குழு பயணம் செய்த சிறப்பு விமானம் மாலை 5.52 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ.) உள்ள பூங்கா ராயா முனையத்தில் தரையிறங்கியது.

பிரதமரின் முதன்மை தனிச் செயலாளர் டத்தோ ஷாரோல் அனுவர் சர்மான் அவரை வரவேற்றார். பின்னர், கேப்டன் நோர் சைபுல்லா மஹாமட் @ முகமது தலைமையிலான அரச ரேஞ்சர் படைப்பிரிவின் (சடங்கு) 1வது பட்டாளத்தைச் சேர்ந்த 28 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பை அதிபர் பார்வையிட்டார்.

கடந்த 2024 அக்டோபர் மாதம் இந்தோனேசிய அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து பிரபோவோ மலேசியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.

பிரபோவோ மற்றும் அவரது தூதுக்குழுவை ஏற்றிச் சென்ற விமானம் பின்னர் நேற்றிரவு 9.58 மணிக்கு இந்தோனேசியாவுக்குப் புறப்பட்டது.

— பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.