மலாக்கா, ஏப்ரல் 7 - இவ்வாண்டு தொடங்கி பல்வேறு சமூக ஊடகங்களின் வழி தேசிய கோட்பாட்டை பின்பற்றும் பிரச்சாரத்தை ஒருமைப்பாட்டு அரசாங்கம் நடத்தவுள்ளது.
அதன் ஐந்தாவது கோட்பாடான நன்நடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதலை அடிப்படையாகக் கொண்டு, இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், தற்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரிடம் அப்பண்புகள் குறைந்து வருவதாக, ஒருமைப்பாடு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மலாக்கா, ஆயிர் குரோ அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 2025 ஒருமைப்பாட்டு வாரத்தை தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாட்டு மக்களிடையே, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு ஒருமைப்பாட்டு அமைச்சு சமூக ஊடகங்களிலும் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா


