கோலாலம்பூர், பிப் 7- நேற்று மாலை வீசிய பலத்தப் புயல் காற்றில்
பாதிக்கப்பட்ட கம்போங் மிலாயு சுபாங் மற்றும் சுபாங் பெர்டானா வட்டார
மக்களுக்கு சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையத்தின் வாயிலாக
உடனடி உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த பேரிடரில் பல வீடுகளும் அடிப்படை வசதிகளும் சேதமடைந்த
வேளையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் அல்லது உயிருடற்சேதம்
ஏற்படவில்லை என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும்
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை
துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் கூறினார்.
இந்த புயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தற்காலிக
உறைவிடம் மற்றும் அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவு
செய்வதற்காக வட்டாரத் தலைவர்கள், நில மற்றும் மாவட்ட அலுவலகம்,
ஷா ஆலம் மாநகர் மன்றம் (பந்தாஸ் பிரிவு) சமூக நலத் துறை, காவல்
துறை உள்ளிட்டத் தரப்பினருடன் தாங்கள் இணைந்து செயல்பட்டு
வருவதாக அவர் சொன்னார்.
இந்த பேரிடர் வட்டார மக்களுக்கு குறிப்பாக நோன்புப் பெருநாளைக்
கொண்டாடுவோருக்கு நிச்சயம் பெரும் பாதிப்பையும் சிக்கலையும்
ஏற்படுத்தியிருக்கும்.
பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நான் நன்கு உணர்ந்துள்ளேன். உரிய உதவிகளை வழங்கும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினரை நான் கேட்டுக் கொள்வதோடு பாதுகாப்பு தொடர்பில் அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்கும்படியும்
வலியுறுத்த விரும்புகிறேன் என்றார் அவர்.
பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவும் நிலையை நேரில் காணவும் தாம்
சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைவில் வருகை
மேற்கொள்ளவிருப்பதாகவும் ரமணன் சொன்னார்.


