கோலாலம்பூர், ஏப் 7- அமெரிக்க அரசாங்கம் ஒரு சார்பாக அமல்படுத்தியுள்ள வர்த்தக வரி தொடர்பான சவால்களை ஆசியான் கூட்டாக எதிர்கொள்வதற்கான வழிவகைகள் குறித்து வியட்னாம் பிரதமர் பாம் மின் சின்னுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று
விவாத்தித்தார்.
ஆசியான் உறுப்பு நாடுகளின் நலனுக்காக சச்சரவைத் தவிர்த்து நியாயமான தீர்வினைக் காணும் பொருட்டு பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க நாங்கள் இணக்கம் கண்டுள்ளோம் என்று அன்வார் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியானின் பொருளாதார மீட்சி நிலையை அதிகரிக்க பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் விநியோகச் சங்கிலித் தொடரை பல்வகைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தாம் இச்சந்திப்பின் போது வலியுறுத்தியதாக நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
மேலும் மியான்மர் நாட்டின் தற்போதைய நிலை குறித்தும் நாங்கள் விவாதித்தோம். முழுமையாக உள்ளடங்கிய மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக நலன் சார்ந்த அனைத்துத் தரப்பினருடனும் ஆசியான் பேச்சு நடத்த வேண்டும் என்பதையும் இச்சந்திப்பில் நாங்கள் ஒப்புக் கொண்டோம் என்றார் அவர்.


