ஷா ஆலம், ஏப். 7- நேற்று மாலை 4.00 மணியளவில் கம்போங் மலாய் சுபாங்கில் வீசிய பலத்த புயல் காற்றின் காரணமாகப் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.
பலத்தக் காற்றினால் பல மரங்கள் சாய்ந்து விழுந்ததோடு வீடுகளின் கூரைகளும் பறந்து சென்றதைக் கண்ட குடியிருப்பாளர்கள் உடனடியாக அவசர உதவிக்காக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவரான 41 வயதான மார்னிசா ஓத்மான் கூறினார்.
வீட்டிலிருந்த போது பலத்த சத்தம் கேட்டது. ஆலங்கட்டி மழை பெய்வதாக எண்ணினேன். ஆனால் வீட்டிற்கு வெளியே பார்த்தபோது வீட்டின் கூரை பெயர்ந்து போயிருந்தது. அந்த நேரத்தில் நிலைமை மிகவும் குழப்பமாக இருந்தது. வரவேற்பறை அறை மற்றும் படுக்கையறைக்குள் நீர் புகுந்தது என்று அவர் தெரிவித்தார்.
ஜாலான் புக்கிட் பாடாக் பகுதியிலிருந்து சுபாங் பெர்டானா வரை பல மரங்கள் வேறோடு சாய்ந்ததோடு கிட்டத்தட்ட 20 வீடுகளும் பாதிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
மிகக் குறுகிய நேரமே இந்த புயல் நீடித்த வேளையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பலர் வீட்டிற்கு வந்திருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது நிலையைச் சிக்கலாக்கியது என்றார் அவர்.


