குவாந்தான், ஏப். 6- அதிக லாபத்தை ஈட்டலாம் என உறுதியளிக்கும் வாட்ஸ்அப் செயலி மூலம் பகிரப்பட்ட இல்லாத முதலீட்டுத் திட்டத்தை நம்பிய நிறுவன நிர்வாகி ஒருவர் 703,000 வெள்ளி சேமிப்புத் தொகையை இழந்தார்.
ஏமாற்றப்பட்ட அந்த 47 வயது பெண், கடந்த ஜூலை மாதம் சந்தேக நபர் வழங்கிய குவாண்டெட்ஜ் கேபிடல் கோ (கியூ.சி. செக்யூர்) எனப்படும் முதலீட்டு செயலியைப் பதிவிறக்கம் செய்ததாக பகாங் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
பின்னர் அவர் நான்கு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் ஏழு பரிவர்த்தனைகள் மூலம் கட்டங் கட்டமாக முதலீடு செய்தார். பெறப்பட்ட லாபம் குறித்த தகவல் அப்பெண்ணிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், எந்த பணத்தையும் மீட்க அனுமதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
முதலீட்டு மூலதனத்தை சந்தேக நபர் அதிகரிக்கச் சொன்ன பிறகு தான் தாம் ஏமாற்றப்பட்டதை அந்த நிர்வாகி உணர்ந்து போலீசில் புகார் செய்தார் என அவர் சொன்னார்.
சொந்த சேமிப்பு, கணவரின் பணம் மற்றும் முதலாளியிடமிருந்து பெற்ற கடன் ஆகியவற்றை அப்பெண் இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அதிக லாபம் கிடைக்கும் என உறுதியளிக்கும் இணைய முதலீட்டு சலுகைகளால் எளிதில் ஏமாற வேண்டாம் என்று யஹாயா பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.


