காஸா நகர், ஏப். 6- இஸ்ரேலுக்குச் சொந்தமான மெகோரோட் நிறுவனத்திலிருந்து
காஸா பகுதிக்கு தண்ணீர் வழங்குவதை இஸ்ரேலிய இராணுவம் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது, இதனால் அந்தப் பகுதிக்கான முழு நீர் விநியோகத்தில் 70 விழுக்காடு வரை துண்டிக்கப்பட்டதாக அனடோலு ஏஜென்சி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கிழக்கு காசா நகரின் ஷுஜையா பகுதியில் உள்ள பிரதான குழாய் இணைப்புப் பாதையில் ஏற்பட்ட இடையூறினால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக காஸா நகர மன்ற செய்தித் தொடர்பாளர் ஹோஸ்னி மெஹன்னா தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை முதல் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்று வரும் இடமாக இது உள்ளது. இந்த இடையூறுக்கான சரியான காரணம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அந்தப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய குண்டுவீச்சினால் குழாய் சேதமடைந்ததா என்பதை விசாரிக்க அனைத்துலக அமைப்புகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று மெஹன்னா குறிப்பிட்டார்.
இந்த இடையூறுகள் நேரடி இராணுவ நடவடிக்கை அல்லது இஸ்ரேலிய அதிகாரிகளின் வேண்டுமென்றே எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூற்றை அவர் நிராகரிக்கவில்லை.
காரணம் எதுவாக இருந்தாலும் பாதிப்பு மிகவும் கவலையளிக்கிறது. மெகோரோட்டில் இருந்து நீர் விநியோகம் விரைவில் மீட்டெடுக்கப்படாவிட்டால் காஸா கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று அவர் எச்சரித்தார்.
முற்றுகை, இடித்த உள்கட்டமைப்புகள் மற்றும் நிலத்தடி நீர் வளங்கள் மாசுபடுதல் காரணமாக நீண்ட காலமாக சுத்தமான தண்ணீர் பற்றாக்குறையால் காஸா பகுதி
மக்கள் போராடி வருகின்றனர்.
கடந்த 2023 அக்டோபரில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் தொடங்கியதிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட இரண்டு மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு மார்ச் மாதத்தில் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கின.


