நெய்பிடாவ், ஏப். 6 - மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட சிறப்பு மலேசிய பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு (ஸ்மார்ட்) நாளை திங்கள்கிழமை வீடு திரும்பும்.
இடிபாடுகளில் சிக்கியவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படாததால் ஸ்மார்ட் குழுவின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டியுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் கூறினார்.
ஸ்மார்ட் குழு ஒருவரை மட்டுமே உயிருடன் மீட்டது. மற்ற அனைவரும் இறந்துவிட்டனர் என்று அவர் நேற்று மியான்மாருக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தை முடிப்பதற்கு முன்பு பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
தங்கள் நாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதிலும் பிற மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதிலும் ஸ்மார்ட் குழுவினர் திறமையாகச் செயல்பட்டதற்காக மலேசியாவிற்கு மியான்மார் தேசிய நிர்வாக மன்றத்தின் தலைவர் மின் ஆங் ஹ்லைங் மற்றும் வெளியுறவு அமைச்சர் யூ தான் ஷ்வே ஆகியோர்
பாராட்டுகளைத் தெரிவித்ததாக முகமது தெரிவித்தார்.
ஆங் ஹ்லைங் மற்றும் தான் ஷ்வே உடனான சந்திப்பின் போது இந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக முகமது கூறினார்.
ஸ்மார்ட் குழுவிடம் போதுமான மீட்பு உபகரணங்கள் இருந்ததால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியான சாகைங்கிற்கு அக்குழு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எங்கள் ஸ்மார்ட் அணியின் மீது அங்குள்ள மக்கள் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டுள்ளனதோடு எங்கள் அணியை மலேசியாவுக்குத் திரும்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
மார்ச் 30 ஆம் தேதி மலேசியா 50 ஸ்மார்ட் உறுப்பினர்கள் கொண்ட குழுவை மீட்பு நடவடிக்கைக்காக இரண்டு ஆகாயப் படையின் ஏ400எம் விமானங்கள் மூலம் மியான்மாருக்கு அனுப்பியது.


