நியாப்யிதாவ், ஏப். 6- பூகம்பத்திற்குப் பிந்தைய நிவாரண மற்றும் மீட்புப் பணிகளைத் தொடரும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலக்கட்டத்திற்கு அப்பால் போர் நிறுத்தத்தை மியான்மாரை ஆளும் இராணுவ அரசு நீட்டிக்கும் என்று ஆசியான், குறிப்பாக மலேசியா நம்புகிறது.
கடந்த மார்ச் 28ஆம் தேதி மியான்மாரைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான பூகம்பத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 22 வரை எதிர்ப்புக் குழுக்களுக்கு எதிராக மூன்று வார போர் நிறுத்தத்தை இராணுவ ஆட்சி அறிவித்துள்ளது.
போர் நிறுத்த அறிவிப்பை மலேசியாவும் ஆசியானும் வரவேற்றுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அழிவின் அளவையும் மியான்மார் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நீண்டகால மனிதாபிமான உதவியின் தேவையையும் கருத்தில் கொண்டு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்த நாடு (மியான்மார்) வெளியிட்ட இந்த அறிவிப்பில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
மோதல்களைத் தொடர வேண்டாம். மியான்மார் மக்களை எவ்வாறு மீட்டு உதவி வழங்க முடியும் என்பதுதான் மிக முக்கியமான விஷயம் என்று மியான்மார் நாட்டிற்கான மனிதாபிமானப் பணியை முடிப்பதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முகமது கூறினார்.
மியான்மாரின் மத்தியப் பகுதியிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஹசான் தாய்லாந்து அமைச்சர் மாரிஸ் சங்கியம்போங்சாவும் இணைந்து மியான்மாருக்கு மனிதாபிமான உதவிப் பணிக்குத் தலைமை தாங்கினர்.
தற்போது மியான்மாரில் உள்ள பிற ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் உதவி வழங்குவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் நீட்டிக்கப்படலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


