கோலாலம்பூர், ஏப். 6- சுங்கை பூலோ, ஜாலான் கம்போங் பாருவில் மூன்று தொழிற்சாலைகளில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு ஆளானார்.
இந்த தீவிபத்து தொடர்பில் பிற்பகல் 1.41 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
சுங்கை பூலோ, புக்கிட் ஜெலுத்தோங், டாமன்சாரா மற்றும் செலாயாங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பிற்பகல் 1.58 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் வங்காளதேசத் தொழிலாளி ஒருவர் இரண்டாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் 90×160 சதுர அடி பரப்பளவு கொண்ட மூன்று தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. இதில் ஜவுளி மற்றும் மறுசுழற்சி தொழிற்சாலைகளுக்கு 80 விழுக்காடு சேதமும் உலோக தொழிற்சாலைக்கு 70 சதவீதம் சேதமும் மர தொழிற்சாலைக்கு 90 விழுக்காடு சேதமும் ஏற்பட்டது. பிற்பகல் 2.51 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீ விபத்தில் ஒரு டோயோட்டா ஹைலக்ஸ் காரும் எரிந்து போனதோடு புரோட்டான் கார் 10 விழுக்காடு சேதமடைந்தது என்று முக்லிஸ் மேலும் கூறினார்.


