கோலாலம்பூர், ஏப். 6- சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 312 ஆவண மாற்று நடைமுறைகளை சுபாங் ஜெயா, சிலாங்கூர் தேசிய பதிவுத் துறை (ஜே.பி.என்.) இதுவரை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.
அந்த தீவிபத்து சம்பவத்தில் அழிந்து போன அடையாள அட்டைகள், பிறப்புப் பத்திரங்கள் திருமணச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை புதிதாக மாற்றித் தருவதை இந்நடவடிக்கை இது உள்ளடக்கியுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஜே.பி.என். இயக்குநர் முகமது ஹபீஸ் அப்துல் ரஹீம் கூறினார்.
இந்த உதவி (ஆவணங்களை மாற்றுதல்) மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் வங்கி பரிவர்த்தனைகள், காப்புறுதி கோரிக்கை, ஸக்கத் மற்றும் பேரிடர் நிவாரணப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆவணங்கள் அவசியம் தேவைப்படுகின்றன என்று அவர் நேற்று இங்கு அருகிலுள்ள புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் தற்காலிக நிவாரண மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.
கூடுதல் பரிசீலனை தேவைப்படக்கூடிய மைகிட் மற்றும் திருமணச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்கள பூர்த்தி செய்யப்பட்டு பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.
நாங்கள் பிறப்புச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை நேரடியாகச் செயல்படுத்தி சமர்ப்பிக்கிறோம். மேலும் தத்தெடுப்புச் சான்றிதழ்கள் மற்றும் திருமணச் சான்றிதழ்களைக் கோரும் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர். மேலும் இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.


