சுபாங் ஜெயா, ஏப். 6- கடந்த 1 ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்த அனைத்து வீடுகளையும் மீண்டும் நிர்மாணிக்க மத்திய அரசு உதவும்.
பாதிக்கப்பட்ட அனைவரின் நிலை குறித்தும் அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதோடு நிரந்தர வீடுகளைக் கட்டுவதற்கான நீண்டகால அடிப்படையிலான நடவடிக்கை ஆதரவு உட்பட நிவாரண முயற்சிகள் விரிவாக செயல்படுத்தப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
இதன் தொடர்பில் மேலும் அறிவிப்புகள் வெளியிடப்படும். பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை இந்த உள்ளடக்கியிருப்பதால் இந்த செயல்முறை அமலாக்கத்திற்கு சிறிது காலம் ஆகலாம். ஆனால் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என அவர் குறிப்பிட்டார்.
முழுமையாகச் சேததமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களின் வீடுகளை மறுநிர்மாணிப்பு செய்வதற்கு தேவையான அனைத்தையும் அரசாங்கம் செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று மாலை புத்ரா ஹைட்ஸ் இலகு இரயில் நிலையத்தில் நடைபெற்ற (எல்ஆர்டி) பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி மற்றும் தற்காலிக வாகனங்களை வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
அதே சமயம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தபடி, அரசாங்கத்தின் அனைத்து வகையான அதிகாரப்பூர்வ உதவிகளும் மாநில அரசு மற்றும் தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ் மூலம் வழங்கப்படும் என்று லோக் கூறினார்.
விநியோகிக்கப்படும் அனைத்து அதிகாரப்பூர்வ அரசு உதவிகளையும் மாநில அரசு விரைவில் ஒருங்கிணைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.


