கோலாலம்பூர், ஏப். 4 - சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் 1 கோடியே 60 லட்சம் வெள்ளி மதிப்புள்ள மெத்தம்பெத்தமின் வகை போதைப் பொருளை கைப்பற்றியதன் மூலம் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கடந்த மாதம் 27ஆம் தேதி காலை 7.20 மணியளவில் சுபாங் ஜெயாவில் கார் ஒன்றை தடுத்து நிறுத்தி இரண்டு உள்ளூர் ஆடவர்களை போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்து இந்த கும்பலின் நடவடிக்கை அம்பலத்திற்கு வந்தாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டி.சி.பி மாட் ஜானி @ முகமது சலாவுடின் சே அலி தெரிவித்தார்.
அந்த காரை சோதனை செய்த போலீசார் காரின் பின்புற பயணிகள் இருக்கை மற்றும் பொருள் வைக்குமிடத்தில் 156 கிலோ எடையுள்ள 150 மெத்தம்பெத்தமின் பொட்டலங்கள் அடங்கிய ஆறு சாக்குப்பைகளைக் கண்டுபிடித்தனர் என அவர் சொன்னார்.
இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதே பகுதியில் கிடங்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஹோம்ஸ்தேய் தங்குமிடத்தை சோதனை செய்து 312 கிலோ எடையுள்ள 300 போதைப்பொருள் பொட்டலங்கள் கொண்ட 12 சாக்குப் பைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அவர் இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அதே நாளில் மதியம் 1.00 மணிக்கு அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாயில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் 51 கிலோ எடையுள்ள அதே வகை போதைப்பொருள் அடங்கிய மேலும் இரண்டு சாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாட் ஜானி கூறினார்.
இக்கும்பல் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விநியோகிக்கும் நோக்கிலான இந்த போதைப் பொருளை அக்கும்பல் ஹோம்ஸ்தே போன்ற வளாகத்தில் பதுக்கி வைப்பது வழக்கம் என நம்பப்படுகிறது என குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஹோம்ஸ்தே கடந்த மார்ச் 26 முதல் நாள் ஒன்றுக்கு 195 வெள்ளிக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அண்டை நாட்டிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கைதான இரண்டு சந்தேக நபர்களும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது சிறுநீர் சோதனையில் தெரிய வந்தது. ஆனால் அவர்களில் ஒருவர் மீது 1976 ஆம் ஆண்டு கலால் சட்டத்தின் 76வது பிரிவின் கீழ் குற்றப்பதிவு உள்ளது என்றார் அவர்.
இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. இரண்டு சந்தேக நபர்களும் மார்ச் 28 முதல் ஏப்ரல் 7 வரை 11 நாட்கள் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.


