கோலாலம்பூர், ஏப். 4 - எரிவாயு குழாய் வெடிப்பினால் ஏற்பட்ட தீவிபத்தில்
பாதிக்கப்பட்ட சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பு பகுதியைச்
சேர்ந்த 25 குடியிருப்பாளர்கள் செரி மலேசியா நிறுவனத்திடமிருந்து ஒரு
மாதக் கால தற்காலிகப் பயன்பாட்டிற்கு கார்களை இன்று பெற்றனர்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் தற்காலிக பயன்பாட்டிற்கு
வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்த 50 எஸ்.யு.வி. வாகனங்களில் ஒரு
பகுதி இதுவாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
எஞ்சிய 25 வாகனங்கள் வரும் திங்கள் கிழமைக்குள் வழங்கப்படும் எனக்
கூறிய அவர், வாக்குறுதியளித்தப்படி வாகனங்களை இரவல்
வழங்கியதோடு பெட்ரோலுக்காக 100 வெள்ளியையும் அளித்த
அந்நிறுவனத்திற்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சொன்னார்.
இது தவிர தற்காலிக நிவாரண மையமாக செய்ல்பட்டு வரும் புத்ரா
ஹைட்ஸ் பள்ளிவாசலின் நடவடிக்கை செலவினங்களை ஈடுகட்டும்
விதமாக செரி மலேசியா நிறுவனம் அதன் நிர்வாகத்திற்கு 50,000
வெள்ளியை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள
தற்காலிக நிவாரண மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்
அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் கூட்டத்தில் டிஜிட்டல் அமைச்சர் கோவிந்த் சிங் மற்றும் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, செரி மலேசியா நிறுவனத்தின் உதவி நிர்வாகத் தலைவர்
லியே சென் பாதிக்கப்பட்ட 25 பேரிடம் எஸ்.யு.வி. வாகனங்களை
ஒப்படைத்தார்.
தற்காலிக பயன்பாட்டிற்காகக் கார்களைக் கோரி 112 குடியிருப்பாளர்கள்
விண்ணப்பம் செய்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் 200 வாகனங்களை
வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளனர்.


