ஷா ஆலம், ஏப். 4 - புத்ரா ஹைட்ஸ், ஜாலான் ஹர்மோனியில் கடந்த
செவ்வாய்கிழமை ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பில் காயமடைந்த
பாம்பு உள்ளிட்ட 40 பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பல்வேறு துறைகள் மற்றும் கிளினிக்குகளின் ஒத்துழைப்புடன் இதுவரை
27 பூனைகள், ஆறு நாய்கள் மற்றும் இரண்டு பாம்புகள் பாதிக்கப்பட்ட
இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில மிருகவதைச்
தடுப்பு சங்கம் கூறியது.
வளர்ப்பு பிராணிகளுக்கு நெருக்குதல் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய
சம்பந்தப்பட்ட வளர்ப்பு பிராணிகள் அன்றைய தினமே அதன்
உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதன் தலைமை நிர்வாகி
கெல்வின் சியா கூறினார்.
உரிமையாளர்கள் அடையாளம் காணப்படாத பிராணிகள் தற்காலிக
தங்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பிராணிகளுக்கு தீப்புண்களும்
மற்றும் தப்பியோடும் போது லேசான காயங்களும் ஏற்பட்டன. அவற்றுக்கு
கடுமையான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று சிலாங்கூர்கினியிடம்
அவர் தெரிவித்தார்.
காயமடைந்த பிராணிகளுக்கு புத்ரா ஹைட்ஸ் ஸ்ரீ மகா காளியம்மன்
ஆலய வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9.00 மணி
முதல் மாலை 5.00 மணி வரை சிகிச்சை வழங்கப்படும் என்றும் அவசியம்
ஏற்படும் பட்சத்தில் சேவை நீடிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பிராணிகளின் நிலை மேன்மை தங்கிய
சிலாங்கூர் பெர்மைசூரி தெங்கு ஹாஜா நோராஷிகினின் கவனத்தை
ஈர்த்தத்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தீவிபத்தைத் தொடர்ந்து அங்குள்ள பிராணிகள் நிலை குறித்து
கவலையடைந்த தெங்கு பெர்மைசூரி, ஏதேனும் உதவ முடியுமா? என எங்கள் சங்கத்தைக் கேட்டார். அதன் அடிப்படையில் இந்த மையத்தை இங்கு திறந்துள்ளோம் என அவர் கூறினார்.


