கோலாலம்பூர், ஏப். 4 - கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த எரிவாயு குழாய்
தீவிபத்துக்குப் பின்னர் சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா
ஹர்மோனிக்கு செல்லும் சாலையில் போலீசாரும் சுபாங் ஜெயா மாநகர்
மன்ற அமலாக்கப் பிரிவினரும் கடுமையான பாதுகாப்பை
அமல்படுத்தியுள்ளனர்.
வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை, பொதுப்பணித் துறை, பொது தற்காப்பு
படை உள்ளிட்ட அரசு நிறுவன மற்றும் அமலாக்கப் பிரிவின்
உறுப்பினர்கள் மட்டுமே சோதனைகளுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட
பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவது சம்பவ இட கட்டுப்பாட்டு சோதனை
சாவடியல் (பி.கே.டி.கே.) பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரிய
வந்தது.
பி.கே.டி.கே. மற்றும் புத்ரா ஹைட்ஸ் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய
வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் ஊடகவியலாளர்கள்
குழுமியிருப்பதைக் காண முடிந்தது.
ஆவணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எடுப்பதற்காகப்
பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்ல குடியிருப்பாளர்கள் இன்று காலை
வரிசை பிரகாரம் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டப் பின்னர் அப்பகுதியை மறுசீரமைக்கும் பணிகள்
தொடங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று
கூறியிருந்தார்.
நேற்று வரை, 85 வீடுகள் குடியிருப்பதற்கு பாதுகாப்பானவை என உறுதி
செய்யப்பட்டு அதன் உரிமையாளர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணியளவில் ஏற்பட்ட இந்த
பயங்கர தீவிபத்தில் சுமார் 30 மீட்டர் உயரத்திற்கு தீப்பிழம்புகள் வானில் எழுந்தன.
இந்த விபத்தின் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதியில் தீயின்
தாக்கம் 1,000 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்த வேளையில் தீயை
அணைப்பதற்கு எட்டு மணி நேரம் பிடித்தது.


