கோத்தா பாரு, ஏப். 4 - வெளிநாட்டு வாகனமோட்டிகளை இலக்காகக் கொண்ட ஓப்ஸ் துங்காக் (Ops Tunggak) நடவடிக்கையின் மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அந்நிய வாகன ஓட்டுநர்கள், குறிப்பாக தாய்லாந்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து மொத்தம் 25 லட்சம் வெள்ளி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் எல்லையில் உள்ள கெடா, கிளந்தான் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக பெர்லிஸில் அதிக சம்மன் தொகை வசூலிக்கப்பட்டதாக
சாலைப் போக்குவரத்துத் துறையின் ஜே.பி.ஜே.) அமலாக்கப் பிரிவு மூத்த இயக்குநர் முகமது கிஃப்லி மா ஹாசன் கூறினார்.
பெரும்பாலான வழக்குகள் தாய்லாந்திலிருந்து மலேசியாவிற்கு குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வரும் வேன் ஓட்டுநர்களை உள்ளடக்கியது என அவர் சொன்னார்.
சமீபத்தில் வழங்கப்பட்ட அதிகபட்ச சம்மன் தாய்லாந்து வேன் ஓட்டுநர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகும். அவர் அதிகப்பட்சமாக அதாவது 65,000 வெள்ளி சம்மன் தொகையை நிலுவையில் வைத்திருந்தார். சம்மன் தொகை செலுத்தப்பட்டப் பின்னரே நாங்கள் அவரது வேனை விடுவித்தோம் என்று குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள லெம்பா சிரே பேருந்து முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓப் ஹரி ராயா 2025 சோதனை நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையை 150 வெள்ளி என்ற அடிப்படையில் நிலையாக நிர்ணயிக்கும் திட்டத்தின் கீழ் ஜே.பி.ஜே. இதுவரை நிலுவையில் உள்ள 3.5 கோடி வெள்ளி அபராதத் தொகையை வசூலித்துள்ளதாக முஹம்மது கிஃப்லி கூறினார்.
இன்றுவரை சுமார் இருபது லட்சம் சம்மன்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்த சலுகையைப் பயன்படுத்தி எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்பு உடனடியாக அபராதத் தொகையைச் செலுத்துமாறு ஜே.பி.ஜே. பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது என அவர் குறிப்பிட்டார்.


