கோத்த பாரு, ஏப். 4 - நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடந்த மார்ச் 24 முதல் மேற்கொள்ளப்பட்ட 'ஓப் ஹரி ராயா 2025' சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது பேருந்து ஓட்டுநர்களுக்கு பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 467 குற்ற அறிக்கைகளை சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) வழங்கியது.
இக்காலகட்டத்தில் 245 இரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் குற்றங்கள் புரிந்த பேருந்து ஓட்டுநர்களுக்கு 198 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டன என்று ஜே.பி ஜே. அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் முகமது கிஃப்லி மா ஹசான் தெரிவித்தார்.
வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியது, இரண்டாவது ஓட்டுநர் இல்லாமல் நான்கு மணி நேரத்திற்கும் மேல் பயணித்தது ஆகிய குற்றங்களுக்கு பெரும்பாலான குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டன என்று நேற்று இங்குள்ள லெம்பா சிரே பேருந்து முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓப் ஹரி ராயா 2025 சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் போது நாடு முழுவதும் 54 பஸ் டிப்போக்கள் மற்றும் 28 முக்கிய முனையங்களில் மொத்தம் 8,173 பேருந்துகள் சோதனை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
பொதுப் போக்குவரத்து சேவைகள் சீராக இயங்குவதை உறுதி செய்வது மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில்
பஸ் சேவை மீதான தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
பேருந்து ஓட்டுநர்களுக்கு சிறுநீர் பரிசோதனை மேற்கொள்வதில் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனத்துடன் ஜே.பி.ஜே. இணைந்து பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நடவடிக்கையின் போது மொத்தம் 947 பேருந்து ஓட்டுநர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இரண்டு ஓட்டுநர்கள் மெத்தம்பெத்தமின் மற்றும் ஷாபு வகை போதைப் பொருளை பயன்படுத்தியது சோதனையில் கண்டறியப்பட்டது என்றார் அவர்.


