ஷா ஆலம், ஏப். 4 - புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைளை
முன்னெடுக்கும்படி சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய மன்றத்தை
(மாய்ஸ்) மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா
அல்ஹாஜ் பணித்துள்ளார்.
இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வேண்டிய உதவிகளை
வழங்கும்படி யாயாசான் இஸ்லாம் டாருள் ஏஹ்சான் (யிட்) அறவாரியத்தையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தவிர இன்ஃபாக் ஜரியா உமாட் இஸ்லாம் சிலாங்கூர் அறக்கட்டளை
நிதியைப் பயன்படுத்தி யாயாசான் இஸ்லாம் டாருள் ஏஹ்சான்
வாயிலாக முஸ்லீம் அல்லாத மாணவர்களுக்கும் உதவிகளை
வழங்கும்படி சுல்தான் பணித்துள்ளதாக சிலாங்கூர் அரச அலுவலகம்
வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
இந்த பேரிடர் குறித்து மேன்மை தங்கிய சுல்தான் வருத்தமும் ஆழ்ந்த
கவலையும் அடைந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் எல்லா வல்ல
இறைவனின் ஆசியுடன் இந்த இக்கட்டான சூழலிலிருந்து விரைவில்
விடுபடுவார்கள் என அவர் எதிர்பார்ப்பதாகப் பேஸ்புக் பக்கத்தில்
வெளியிடப்பட்ட அந்த அறிக்கை தெரிவித்தது.


