கோலாலம்பூர், ஏப். 4 - வரி செலுத்தப்படாத மதுபானங்களைக் லோரியில்
கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் அந்நிய நாட்டு வாகனமோட்டி
ஒருவரை கூட்டரசு பிரதேச சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.)
கைது செய்துள்ளது.
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் செந்துல் டோல் சாவடி அருகே
நேற்று மாலை 3.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஓப் ஹரி ராயா 2025
சோதனையின் போது அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாகக் கோலாலம்பூர்
ஜே.பி.ஜே. இயக்குநர் ஹமிடி ஆடாம் கூறினார்.
இச்சோதனையின் போது சரக்கு லோரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட
அதிகாரிகள் அதில் 2,612 டின் மதுபான டின்கள் இருப்பதைக் கண்டதாகவும்
இந்த மதுபானத்திற்கு செலுத்த வேண்டிய வரி 71,351.28 ஆகும் என்றும்
அவர் சொன்னார்.
அந்த அந்நிய பிரஜை வாகனமோட்டும் லைசென்ஸ் மற்றும் சரக்கு
வாகனங்களை ஓட்டுவதற்கான ஜி.டி.எல் லைசென்ஸைக்
கொண்டிராததோடு புஸ்பாகோம் சென். பெர்ஹாட் நிறுவனத்தின்
சோதனை சான்றிதழ் இல்லாதது, சாலை வரி காலாவதியான உள்ளிட்ட
தொழில்நுட்பக் குற்றங்களைப் புரிந்ததும் இச்சோதனையில்
கண்டறியப்பட்டது என்றார் அவர்.
இது தவிர, அந்த லோரி அனுமதிக்கப்பட்டதை விட 33.6 விழுக்காடு
கூடுதல் எடையையும் ஏற்றியிருந்தது இச்சோதனையில் தெரியவந்தது
என்று அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
மேலும், அந்த ஆடவரின் நடத்தப்பட்ட சோதனையில் பி.எல்.எஸ்.
எனப்படும் சுற்றுலா வருகை அனுமதி காலாவதியாகியிருப்பதும்
கண்டறியப்பட்டது என்றார் அவர்.
அந்த லோரியை ஜே.பி.ஜே. அதிகாரிகள் கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக அரச மலேசிய சுங்கத் துறையிடம் ஒப்படைத்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.


