அங்காரா, ஏப். 4 - காஸா பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 44 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
காஸா நகரின் ஷெஜையா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
அல்-யர்மூக் சாலை நெடுகிலும் உள்ள வீடுகள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மேலும் ஐந்து பேர் பலியானதாகவும் அந்த வட்டாரம் கூறியது.
மேலும், கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மூன்று பாலஸ்தீனர்களின் வீடுகளைக் குண்டுவீசித் தாக்கியதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர்.
அதே நகரத்தின் பல பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் அகதிகள் முகாம்களில் தஞ்சம் புகுந்தவர்கள் உட்பட 12 பேர் பலியாகினர்.
காஸாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் காஸா மீதான தாக்குதல்களை அதிகரிக்கவிருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.
கடந்த மார்ச் 18ஆம் தேதி காஸா மீது இஸ்ரேல் ஒரு திடீர் வான் தாக்குதலை நடத்தியது. அதன் பின்னர் நடத்தப்பட்டத் தொடர் தாக்குதல்களில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு 2,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கடந்த ஜனவரியில் முடிவுக்கு வந்தது.


