NATIONAL

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஒரு மாதப் பில்லுக்கு 100 விழுக்காடு கட்டணக் கழிவு - டி.என்.பி. வழங்கும்

4 ஏப்ரல் 2025, 1:47 AM
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஒரு மாதப் பில்லுக்கு 100 விழுக்காடு கட்டணக் கழிவு - டி.என்.பி. வழங்கும்

கோலாலம்பூர், ஏப். 4 - சுபாங் ஜெயா,  புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஒரு மாத மின்சாரக் கட்டணத்தில் 100 விழுக்காடு  தள்ளுபடியை வழங்கும்  உதவித் திட்டத்தை தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.) அமல்படுத்தும்.

2025 மார்ச் மாத மின் கட்டணத்தின் அடிப்படையில்  இந்த தள்ளுபடி வழங்கப்படும் என்றும் ஏப்ரல் மாதத்திற்கான  மின்சாரக் கட்டணத்தில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் டி.என்.பி. ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

இந்த உதவி பில் தள்ளுபடிகளுக்கு அப்பாற்பட்டது. இதில் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான மின்சார விநியோக மறு இணைப்புக்கான விண்ணப்ப கட்டணங்களைத் தள்ளுபடி செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தாமதமாகச் செலுத்தியதற்கான அபராதக் கட்டணத்திலிருந்து விலக்களிப்பது ஆகியவையும் அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள  வயரிங் எனப்படும் மின் இணைப்பு  அமைப்பை முழுமையாக ஆய்வு செய்து  பயன்பாட்டிற்கு பாதுகாப்பாகவும் குடியிருப்பாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாமலும் இருப்பதை உறுதி செய்வதற்காக தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுடன் டி.என்.பி. இணைந்து செயல்படும்.

பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்கள்  மின் விநியோகம் தொடர்பான உதவிகளைப் பெறுவதற்காக கடந்த 2ஆம் தேதி முதல் காவல் செயல்பாட்டு அறைக்கு அருகில் ஒரு சேவை முகப்பிடத்தை  டி.என்.பி.  அமைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை டி.என்.பி. அதிகாரிகள் நேரடியாகத் தொடர்புகொண்டு தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள். அதே சமயம், நடப்பு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது தேவைப்படும் கூடுதல் உதவிகளை டி.என்.பி.  மதிப்பிடும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்வதில் எங்கள் நிறுவனம் உறுதியாக உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் நல்வாழ்வையும் நாங்கள் விரும்புகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.