சுபாங் ஜெயா, ஏப். 3- எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு இங்குள்ள புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் பல்நோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளவர்களுக்கு மொத்தம் 300 பாஜூ குரோங் உடைகள் மற்றும் பாட்டில் குடி நீர் விநியோகிக்கப்பட்டன.
ஃபோ குவாங் ஷான் மலேசியா அமைப்பினால் நன்கொடையாக வழங்கப்பட்ட அப்பொருட்கள் அந்த மையத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் என்று நம்புவதாக கின்ராரா தொகுதி சட்டமன்ற இங் ஸீ ஹான் கூறினார்.
இன்று நான் சிலாங்கூர் மகளிர் சமூக நலன் மற்றும் தொண்டு அமைப்பின் (பெக்கவானிஸ்) பிரதிநிதிகளுடன் நன்கொடையாக வழங்கப்பட்ட இப்பொருட்களை விநியோகித்தேன். இது நோன்புப் பெருநாளை கொண்டாடுபவர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியைத் தரும் என்று நம்புகிறேன் என அவர் சொன்னார்.
இங்கு தங்கியுள்ளவர்களிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் போதுமான அடிப்படைப் பொருட்கள் இங்கு உள்ளன. இருப்பினும், அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் இங்குள்ள ஊழியர்களிடம் தெரிவிக்கலாம். அவர்கள் உதவத் தயாராக இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 84 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 311 பாதிக்கப்பட்டவர்கள் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் பல்நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


