கோலாலம்பூர், ஏப். 3 - நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பிறகு மக்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு திரும்புவதால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தினசரி 20 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் என்று பிளஸ் மலேசியா பெர்ஹாட் எதிர்பார்க்கிறது.
எதிர்வரும் ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளை திரும்பும் பயணத்திற்கான உச்ச பயண நாட்களாக அது அடையாளம் கண்டுள்ளது.
நெரிசலைக் குறைப்பதற்கு ஏதுவாக பிளஸ் செயலியில் உள்ள MyPLUS-TTA இலக்கவியல் பயண அட்டவணையைப் பயன்படுத்தி தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு வாகனமோட்டிகளை பிளஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
வாகனமோட்டிகள் தங்கள் பயணத்தை மிகவும் திறமையாக திட்டமிட MyPLUS-TTA டிஜிட்டல் அட்டவணை பெரிதும் உதவுகிறது. சீரான போக்குவரத்தையும் அனைவருக்கும் மிகவும் வசதியான பயணத்தையும் இது உறுதி செய்கிறது என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
கூடுதல் ஊக்குவிப்பாக, பிளஸ் செயலியில் உள்ள 'Follow MyPLUS-TTA for Hari Raya Aidilfitri' எனும் பிரச்சாரத்தின் மூலம் MyPLUS-TTA அட்டவணையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளுக்கு 20,000 வெள்ளி வரையிலான மதிப்புள்ள பரிசுகளையும் பிளஸ் நிறுவனம் வழங்குகிறது.


