பத்து பஹாட், ஏப். 3 - மியான்மரில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி ஆடவர் மற்றும் பெண்ணை கடத்தியதாக சமையல்காரர் மற்றும் வேலையில்லாத ஆடவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன் தங்களுக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை வோங் ஜுன் வெய் (வயது 26) மற்றும் ஜாஸ்பர் யாப் என் வை (வயது 20) ஆகிய இருவரும் மறுத்து விசாரணை கோரினர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 15 முதல் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வரை மியான்மரின் ஷ்வேகோக்கோவின் யாதாயில் தொழிலாளர் துஷ்பிரயோக நோக்கத்திற்காக டான் கை லுன் (வயது 26) மற்றும் வோங் சீ ஃபன் (வயது 34) ஆகியோரைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் 2007 ஆம் ஆண்டு ஆள்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 12வது பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை என்று துணை அரசு வழக்கறிஞர் ஒத்மான் அஃபான் இஸ்மாயில் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வோங் மற்றும் யாப் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் டான் சாங் யான் ஆஜரானார். ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக இந்த வழக்கை நீதிமன்றம் எதிர்வரும்
ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


