NATIONAL

பூகம்பப் பேரிடருக்கு மத்தியிலும் மியான்மர் ஜூந்தா தலைவர் பேங்காக் மாநாட்டில் பங்கேற்பு

3 ஏப்ரல் 2025, 8:31 AM
பூகம்பப் பேரிடருக்கு மத்தியிலும் மியான்மர் ஜூந்தா தலைவர் பேங்காக் மாநாட்டில் பங்கேற்பு

இஸ்தான்புல், ஏப். 3 -  பேரழிவை ஏற்படுத்திய  இரு நிலநடுக்கங்களுக்கு மத்தியில் மியான்மர் போராடி வரும் நிலையில் அந்நாட்டின்  இராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் ஹ்லைங் தாய்லாந்தில் நடைபெறும் பிராந்திய உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

நாளை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) நடைபெறும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க அவர் பேங்காக்கிற்கு வருகை தருவார் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு  மியன்மார் இராணுவத் தலைவர் பேங்காக் மேற்கொள்ளும் முதலாவது பயணம்  இதுவாகும்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) மியான்மரில்  ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ரிக்டர் எனப் பதிவான  இரு பேரழிவு தரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது பயணம் ரத்து செய்யப்படும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

மியான்மரின் மாநில நிர்வாக கவுன்சில் தகவல் குழுவின்  அறிக்கையின்படி மியான்மரில் நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்பு  2,886 பேரை  எட்டியுள்ளது. மேலும்  4,639 பேர் காயமடைந்துள்ளதோடு 373 பேர் இன்னும் காணவில்லை.

ஆறாவது பிம்ஸ்டெக் உச்ச நிலை மாநாட்டிற்கு மின் ஆங் ஹ்லைங் வருகை புரிகிறார். அவர் ஏப்ரல் 4 ஆம் தேதி மாநாட்டில் கலந்து கொள்வார் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நிகோர்ண்டேஜ் பாலங்குரா கூறினார்.

இன்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை பேங்காக்கில் பிம்ஸ்டெக் உச்சநிலை மாநாடு நடைபெறுகிறது. தாய்லாந்து, மியான்மர், இந்தியா, வஙாகாளதேசம், நேபாளம், இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.