சுபாங் ஜெயா, ஏப். 3 - புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹர்மோனியில்
நிகழ்ந்த எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
வாகனமோட்டும் உரிமத்தை இலவசமாக மாற்றித் தரும் சேவையை
சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) வழங்கும்.
இது தவிர, சாலை வரியை (எல்.கே.எம்.) மாற்றுவது மற்றும் வாகன
உரிமைப் பத்திரத்தை (வி.ஒ.சி.) மாற்றுவது ஆகிய சேவையும் இதில்
அடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
இந்த சேவை இன்றும் நாளையும் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில்
வழங்கப்படும் என்றும் தேவையின் அடிப்படையில் இதற்கான கால
அவகாசம் நீட்டிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் முக்கிய ஆவணங்களை மறுபடியும்
பிரதியெடுக்க இந்த முன்னெடுப்பு உதவும். இது தவிர அடையாளக் கார்டு
மற்றும் பிறப்பு பத்திரங்கள் தொடர்பான அலுவல்களைக் கவனிப்பதற்கு
தேசிய பதிவுத் துறையும் முகப்பிடத்தை திறந்துள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.
காப்புறுதி கோரிக்கைகளை முன்வைப்பதற்கு வாகனப் பதிவு பத்திரம் மிக
முக்கிய ஆவணமாக விளங்குகிறது. எந்த நிர்வாக நடைமுறையும் இன்றி
இங்கு அனைத்து ஆவணங்களையும் எந்த கட்டணமும் இன்றி
பிரதியெடுக்க முடியும். போலீஸ் புகார் போன்ற வழக்கமான
நடைமுறையைப் பின்பற்றினால் போதுமானது என்று அவர் சொன்னார்.
அவர்கள் தங்கள் பெயரையும் அடையாளக் கார்டு எண்ணையும்
குறிப்பிட்டால் மட்டும் போதும். அனைத்து ஆவணங்களையும் இலவசமாக
பிரதியெடுத்து விட முடியும் என்று இங்குள்ள புத்ரா ஹைட்ஸ்
பள்ளிவாசலில் அமைந்துள்ள தற்காலிக நிவாரண மையத்தில்
செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் குறிப்பிட்டார்.
மேலும் முற்றிலும் பயன்படுத்த முடியாத அல்லது கட்டுபடி விலையிலான பழுதுபார்ப்புக்கு அப்பாற்பட்ட வாகனங்களுக்கு காப்புறுதி
பெறுவது தொடர்பான ஆலோசகச் சேவையை மலேசிய பொது காப்புறுதி
சங்கமும் அதன் தொடர்பான நிறுவனங்களும் இங்கு வழங்குகின்றன
என்றும் அவர் தெரிவித்தார்.


