கோலாலம்பூர், ஏப். 3 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் உள்ள ஜாலான் புத்ரா ஹார்மோனியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான தவறான நடவடிக்கைகள் குறித்த ஆதாரங்களைக் கொண்ட பொதுமக்கள் அவற்றை வழங்கி உதவுமாறு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.
குடியிருப்பாளர்களுக்கு கடுமையான சொத்து சேதத்தை ஏற்படுத்திய எரிவாயு கசிவு மற்றும் தீ விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்கு ஏதுவாக முழுமையான விசாரணை நடத்துவதில் அதிகாரிகளுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்க உள்ளூர் அதிகாரிகள் உட்பட மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் செளகரியமே
மாநில அரசு மற்றும் மத்திய அரசின் தலையாய முன்னுரிமையாகும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கை 72 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்று அமிருடின் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மண் தோண்டும் நடவடிக்கையே இவ்விபத்துக்கு காரணம் என்ற கூற்றை காவல் துறை விசாரிக்கும் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் முன்னதாகக் கூறியிருந்தார்.


