கோலாலம்பூர், ஏப். 3 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையை மலேசிய கட்டுமானத் தொழில்துறை மேம்பாட்டு வாரியம் (சி.ஐ.டி.பி.) நேற்று மாலை மீட்டுக் கொண்டதோடு
மன்னிப்பும் கோரியது.
பல்வேறு அதிகாரத் தரப்பினர் சம்பந்தப்பட்ட விசாரணை செயல்முறையை முந்திக்கொள்ள விரும்பாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று சி.ஐ.டி.பி.
தனது சமீபத்திய அறிக்கையில் தெளிவுபடுத்தியது.
நாட்டின் கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்குப் பொறுப்பான அமைப்பு என்ற முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொடர்ச்சியான விசாரணைக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளோம் என அந்த வாரியம் தெரிவித்தது.
இந்த அறிக்கையால் குறிப்பாக பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு
ஏற்பட்ட ஏதேனும் குழப்பம் அல்லது சங்கடங்களுக்கு சி.ஐ.டி.பி. மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.
அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் புரிந்து கொள்கிறோம். மேலும் இந்த விஷயம் முழு உயர்நெறியுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் கையாளப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் பாடுபடுகிறோம். இந்த சம்பவத்தின் ஒவ்வொரு அம்சமும் முழுமையாகவும் நியாயமாகவும் விசாரிக்கப்படுவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரநிலை மற்றும் கட்டுமானத் துறை விதிமுறைகள் விஷயத்தில் சி.ஐ.டி.பி ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் விதிமுறை மீறல்களுக்கு எதிராக எந்த பாரபட்சமும் இன்றி பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது வலியுறுத்தியது.
அனைத்து தரப்பினரின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நலன்களுக்காக நாட்டின் கட்டுமானத் தொழில் மிக உயர்ந்த தரத்தின்படி செயல்படுவதை உறுதி செய்வதே எங்கள் நிலைப்பாடு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு ஏற்பட்ட பயங்கரத் தீ சுமார் 70×80 அடி பரப்பளவை உள்ளடக்கிய 32 அடி ஆழமான பள்ளத்தை உருவாக்கி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.


