கோலாலம்பூர், ஏப். 3 - இரு தினங்களுக்கு முன்னர் புத்ரா ஹைட்ஸ்
பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தைத் தொடர்ந்து அருகிலுள்ள
எரிவாயு விநியோக வசதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் ஒரு சில
இடங்களில் எரிவாயு விநியோகத்தை கேஸ் மலேசியா பெர்ஹாட்
நிறுவனம் கட்டுப்படுத்தியுள்ளது.
எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஷா ஆலம், குண்டாங்,
பெட்டாலிங் ஜெயா, தெலுக் பங்ளிமா காராங், கோலக் கிள்ளான், பூலாவ்
இண்டா ஆகியவையும் அடங்கும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இது குறித்து தகவல்
தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் சமீபத்திய நிலவரங்கள் அவர்களுக்கு
தொடர்ச்சியாக வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியது.
பயனீட்டாளர்கள் எதிர்நோக்கும் சவால்களை கேஸ் மலேசியா
உணர்ந்துள்ளது. தாக்கத்தின் அளவைக் குறைப்பதற்கு நாங்கள்
விநியோகிப்பாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டத் தரப்பினருடன் ஒத்ழைத்து
வருகிறோம் என்று அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
பாதுகாப்புக்கும் உயர்நெறிக்கும் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்
அதேவேளையில் நிலைமையை அணுக்கமாக கண்காணிப்பதற்கு ஏதுவாக
அனைத்து வளங்களையும் எங்கள் நிறுவனம் ஒன்று திரட்டும் என அவர்
குறிப்பிட்டார்.
இந்த பேரிடர் சம்பவம் நிறுவனத்தின் 2025ஆம் ஆண்டிற்கான நிறுவன
குழும வருமானத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும்
அந்நிறுவனம் உறுதியளித்தது.
இக்காலக்கட்டத்தில் நிலைமையை உணர்ந்து தங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தக பங்காளிகளுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அது கூறியது.


