கோலாலம்பூர், ஏப். 3 - சுபாங் ஜெயா, ஜாலான் புத்ரா ஹார்மோனி, புத்ரா ஹைட்ஸில் நேற்று முன்தினம் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்கு முன் சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் திறக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தின் (பி.பி.எஸ்.) நிர்வாகத்துடன் கலந்தாலோசிக்கும்படி தனிநபர்கள் மற்றும் அரசு சாரா அமைப்பினர் (என்.ஜி.ஓ.) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேவையில்லாத பொருட்கள் அதிகளவில் நிரம்பி வழிவதைத் தடுக்க இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக பெண்கள் திறன் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.
உதவி பெறுபவர்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கு முன் சம்பந்தப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் பி.பி.எஸ். நிர்வாகத்துடன் முதலில் ஆலோசனை நடத்துவது நல்லது. தற்காலிக நிவாரண மையங்கள் சமூக நலத்துறையின் அதிகார வரம்பிற்குள் வருவதால் பெறப்படும் உதவிகளை அந்த மையம் ஒருங்கிணைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று, தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ள பெண்கள் மற்றும் சிறார்களுக்கு உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
நிவாரண மையம் பெற்ற உதவி பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை நான்கு நாட்கள் வரை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளது என்று அன்ஃபால் மேலும் தெரிவித்தார்.
அதிக அளவு பெறப்பட்ட காரணத்தால் பயன்படுத்தப்பட்ட ஆடைகளின் நன்கொடைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உதவிப் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு மாநில அரசு அமைப்பான வனிதா பெர்டாயா சிலாங்கூர் உறுப்பினர்களை தமது தரப்பு ஈடுபடுத்தும் என்றார் அவர்.


