கோலாலம்பூர், ஏப். 2 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் ஜாலான் புத்ரா ஹார்மோனியில் எரிவாயு குழாய் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வந்தததாக நம்பப்படும் குத்தகையாளரை அடையாளம் கண்ட பிறகு விசாரணைக்காக அவரை போலீசார் வரவழைப்பார்கள்.
இந்த சம்பவம் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பது மற்றும் அவர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் இதுவரை எந்த குத்தகையாளரையும் விசாரணைக்காகக் காவல்துறை அழைக்கவில்லை என்று சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.
பணி அனுமதி வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பெட்ரோனாஸ் நிறுவனத்திடம் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பணி முடிந்ததும் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இன்று சுபாங் ஜெயாவில் உள்ள சம்பவக் கட்டுப்பாட்டு நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று நிகழ்ந்த இத்தீவிபத்துக்கு அங்கு மேறாகொள்ளப்பட்ட மணா தோண்டும் பணிகள் காரணம் என்று சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் செய்திகள் குறித்து வான் அஸ்லான் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக மருத்துவமனையிலும் தற்காலிக நிவாரண மையங்களிலும் தங்கியுள்ளவர்களிடம் தாங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.


