புத்ரா ஹைட்ஸ், ஏப்ரல் 2 - நேற்று காலை சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்த சம்பவத்தினால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உட்பட தனது ஊழியர்களுக்குக் கல்வி அமைச்சு 1,000 ரிங்கிட் வழங்கவுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, ஐந்து ஆசிரியர்கள் மற்றும் 102 மாணவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட 107 பேரை அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
அவர்களில் நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாடப்புத்தகங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்கள் போன்ற பள்ளிப் பொருள்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநில கல்வித் துறை அனைத்து தரவுகளையும் சேகரித்து மதிப்பாய்வு செய்து உதவி வழங்கும் என்று ஃபட்லினா குறிப்பிட்டார்.
-- பெர்னாமா


