ஷா ஆலம், ஏப். 2 - சுபாங் ஜெயா, ஜாலான் புத்ரா ஹார்மோனி புத்ரா ஹைட்ஸில் நேற்று காலை ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக மற்றொரு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
நேற்றிரவு சுமார் 8.30 மணிக்கு புத்ரா ஹைட்ஸ், எம்.பி.எஸ்.ஜே. கேமிலியா பல்நோக்கு மண்டபத்தில் திறக்கப்பட்ட நிவாரண மையத்தில் இப்போது எட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்படுட்டுள்ளனர் என்று முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
மஸ்ஜித் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் 109 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் நெரிசலை விரும்பவில்லை. ஆகவே, ஏழு கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு நிவாரண மையத்தைத் திறக்கிறோம் என்றார் அவர்.
மருத்துவமனைகளில் சிவப்பு மண்டலத்தில் 12 பேருக்கும் மஞ்சள் மண்டலத்தில் 50 பேருக்கும் பச்சை மண்டலத்தில் 38 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் குறித்த சமீபத்திய நிலவரங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
சுபாங் ஜெயா, ஜாலான் புத்ரா ஹார்மோனி புத்ரா ஹைட்ஸில் உள்ள எரிவாயு குழாய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நேற்று உறுதிப்படுத்தியது.
சுபாங் ஜெயா, பூச்சோங், ஷா ஆலம் மற்றும் ரவாங் உள்ளிட்ட ஒன்பது தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 78 உறுப்பினர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மை திட்டத்தில் மேம்பாடுகளை கொண்டு வருவது குறித்து கருத்துரைத்த இளைஞர் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான முகமது நஜ்வான், மாநில அரசு இந்த விஷயத்தை விரிவாக விவாதிக்கும் என்றார்.
இந்த விவகாரம் குறித்து ஊராட்சி மன்ற அதிகாரிகள் உட்பட பெட்ரோனாஸ் நிறுவனத்துடனும் பல்வேறு கோணங்களில் விவாதிப்போம். இந்த விஷயத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். பின்னர் இது குறித்து அனைத்து தரப்பினருடனும் விவாதிப்போம் என்று அவர் கூறினார்.


