கோலாலம்பூர், ஏப். 2 - சுபாங் ஜெயா, ஜாலான் ஹர்மோனி, புத்ரா
ஹைட்ஸில் நேற்று காலை ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்புச்
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கம்போங் கோல சுங்கை பாரு மற்றும்
கம்போங் தெங்கா குடியிருப்பாளர்களுக்கு பூச்சோங் நாடாளுமன்ற
அலுவலகம் உடனடிய உதவியாக தலா 1,000 வெள்ளியை வழங்குகிறது.
தனது தொகுதியில் உள்ள இவ்விரு குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு
குறிப்பாக இந்த பேரிடரில் வீடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு
இந்த நிதியுதவி இன்று தொடங்கி பகிர்ந்தளிக்கப்படும் என்று தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின் கூறினார்.
இன்னும் தங்கள் குடியிருப்பு பகுதியில் தங்கியுள்ளவர்களுக்கு உதவிகள்
பின்னர் பகிர்ந்தளிக்கப்படும். இதர பிரிவைச் சேர்ந்த
பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரப்பூர்வ தரவுகள் கிடைத்தவுடன் உதவிகள்
பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட
பதிவில் கூறினார்.
உடனடி உதவித் தேவைப்படும் தனது தொகுதியைச் சேர்ந்த மக்கள்
கம்போங் பத்து 13 மேம்பாடு மற்றும் பாதுகாப்பு செயல்குழு தலைவரை
011-27217445 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர்
ஆலோசனை கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை
வழங்குவதற்காக தொகுதி அலுவலகம் 10,000 வெள்ளியை ஒதுக்கீடு
செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட 529 பேர் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல்
மற்றும் எம்.பி.எஸ்.ஜே. சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக
சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான்
மாமாட் கூறினார்.


