புத்ராஜெயா, ஏப்ரல் 2 — தனி நபர் ஒருவர் X தளத்தில் பதிவேற்றிய இனவெறி மற்றும் ஆத்திரமூட்டும் பதிவை குறித்து மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்திடம் (MCMC) தேசிய ஒற்றுமை அமைச்சர் அலுவலகம், புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அந்த நபர் விசாரிக்கப்படுவார் என்றும், 1998 தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்புவதாக தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் டாகாங்
கூறினார்.
“மலேசியர்களின் நல்லிணக்கமும் ஒற்றுமையும் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் தேசிய ஒற்றுமை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
எனவே, ஒற்றுமையை உட்படுத்தும் மற்றும் வெறுப்பைத் தூண்டும் எந்தவொரு பதிவும் அல்லது செயலும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
“சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் மிகவும் நெறிமுறையுடன் இருக்கவும், இன மற்றும் மதப் பதட்டங்களைத் தூண்டக்கூடிய எந்தவொரு செயல்களையும் தவிர்க்கவும் நான் நினைவூட்ட விரும்புகிறேன்,” என்று அவர் தனது X தளத்தில் தெரிவித்தார்.
முன்னதாக, மார்ச் 5 மற்றும் மார்ச் 26 தேதிகளில் @AmirRidhwann என்ற பயனரின் இந்திய சமூகத்திற்கு எதிராக X இன் இரண்டு ட்வீட்கள் வைரலானன. ஆனால், சமீபத்திய சரிபார்ப்பில் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன என்பது கண்டறியப்பட்டது.
— பெர்னாமா


