சுபாங் ஜெயா, ஏப். 2 - இங்குள்ள ஜாலான் புத்ரா ஹர்மோனி புத்ரா
ஹைட்ஸ் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட எரிவாயு குழாய்
தீவிபத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பு எந்த அளவில்
உள்ளது என்பதை உறுதி செய்ய 20 அரசு நிறுவனங்கள் விசாரணை
மேற்கொள்ளவுள்ளன.
இந்த விசாரணையில் சம்பந்தப்பட்டுள்ள துறைகளில் அரச மலேசிய
போலீஸ் படை, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, தெனாகா
நேஷனல் பெர்ஹாட், ஊராட்சி மன்றம், மாவட்ட அலுவலகம்
ஆகியவையும் அடங்கும்.
பாதுகாப்பு குழுவினரின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில்
ஜாலான் ஹர்மோனி பகுதி கட்டங் கட்டமாக மூடப்பட்டுள்ள வேளையில்
பாதிக்கப்பட்ட மக்களின் வசதிக்காக அது கட்டங் கட்டமாக திறக்கப்படும்
என சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான்
வான் மாமாட் கூறினார்.
விரிவான விசாரணை நடத்துவதற்கும் பாதிக்கப்பட்ட பகுதியில் அடுத்தக்
கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஏதுவாக அனைத்து அரசு
நிறுவனங்களையும் உள்ளடக்கிய விளக்க க் கூட்டம் ஒன்று விரைவில்
நடத்தப்படும் என நேற்று சம்பவ இடத்திலுள்ள கட்டுப்பாட்டு மையத்தில்
செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் சொன்னார்.
இதனிடையே, இந்த எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து
வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவது
உள்ளிட்ட நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுத்துள்ளதாக மலேசிய
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர்
ஹிஷாம் முகமது தெரிவித்தார்.
தீவிபத்து போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாதிருப்தை உறுதி
செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழு ஒன்றை
தாங்கள் சம்பவ இடத்தில் நிறுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


