ஷா ஆலம், ஏப். 2 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் நேற்று காலை நிகழ்ந்த எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளும் பெட்ரோனாஸ் நிறுவனமும் தற்காலிக தங்குமிடத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடும்.
சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்க்க நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு, நலன் மற்றும் செளகரியம் ஆகியவற்றுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் முன்னுரிமை அளிக்கும் என்று புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தைப் பார்வையிட்ட பிறகு நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு காரணமான தவறான நடவடிக்கை குறித்த ஆதாரங்கள் அல்லது தகவல்கள் ஏதேனும் உள்ளவர்கள் விசாரணையை மேற்கொண்டு அரச மலேசியா காவல்துறையிடம் அது குறித்து புகாரளிக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து குடியிருப்பாளர்களின் சொத்துக்களுக்கு பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்திய இந்த எரிவாயு குழாய் கசிவு மற்றும் வெடிப்புக்கான உண்மையான காரணம் குறித்து அதிகாரிகளால் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி விநியோகத்தை எளிதாக்க மாநில பேரிடர் மேலாண்மை பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறும் அமிருடின் வலியுறுத்தினார்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் மூலம் 305 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 125 பேர் தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்ததால் காயமடைந்தனர்.
அவர்களுக்கு அருகிலுள்ள சூராவ் நூருல் இமான் மற்றும் ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் முதலுதவி அளிக்கப்பட்டது, பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.


