கோலாலம்பூர், ஏப். 2 - சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் நேற்று ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடியிருப்பு மீதும் இன்று முதல் முழுமையான ஆய்வு மற்றும் பாதுகாப்பு மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.
குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவதற்கு முன் தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.), பொதுப்பணித் துறை மற்றும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆகியவை அவ்வீடுகள் மீது விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
இந்த பேரிடரால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம், எந்த வீடுகளுக்கு குடியிருப்பாளர்கள் திரும்ப அனுமதிக்கலாம்? எந்த வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படாது? எவை பாதுகாப்பானவை மற்றும் எவை பாதுகாப்பற்றவை என்பதை இந்த ஆம்வு அடையாளம் காணும் என்று அவர் நேற்று சம்பவக் கட்டுப்பாட்டு நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
லேசான பாதிப்புக்குள்ளான வீடுகளின் குடியிருப்பாளர்கள் நேற்று மாலை 6.30 மணி முதல் ஆவணங்கள் மற்றும் மருந்துகள் போன்ற முக்கியமான பொருட்களைச் சேகரிக்க தற்காலிகமாக வீடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இரண்டு பிரதிநிதிகள் வீட்டிற்குச் சென்று முக்கியமான பொருட்களை சேகரிக்க நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால், இப்போதைக்கு எந்த குடியிருப்பாளர்களும் வீட்டில் இரவு தங்க அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.


