கோலாலம்பூர், ஏப். 2- சுபாங் ஜெயா, ஜாலான் புத்ரா ஹர்மோனி, புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாயில் தீவிபத்து ஏற்பட்டதற்கு பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மண் தோண்டும் நடவடிக்கையே காரணம் என்ற குற்றச்சாட்டை காவல் துறை விசாரிக்கும்.
இந்த தீவிபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையும் பெட்ரோனாஸ் நிறுவனமும் குறிப்பிட்ட இடங்களில்
சோதனை நடத்தும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
தீயைக் கட்டுப்படுத்தும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு இன்று முன்னுரிமை அளிக்கப்படுவதால் இந்த விசாரணை நாளை தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த தீவிபத்துக்கு சம்பவ இடத்தில் மண் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது உள்பட பல்வேறு புகார்களை தாங்கள் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
இது குறித்து நாங்கள் விசாரணை நடத்துவோம். இதில் உண்மை இருப்பது
கண்டறியப்பட்டால் அந்த மண் தோண்டும் செயலுக்கு யார் பொறுப்பு
எனக் கண்டறியப்படும் என சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த
போது அவர் தெரிவித்தார்.


