ஷா ஆலம், ஏப். 2- சபாக் பெர்ணம், கம்போங் பத்து 39 இல் பட்டாசு விற்கும் கெனாப்பி கூடாரத்தில் இன்று அதிகாலை தீப்பிடித்ததில் நால்வர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு அதிகாலை 1.08 மணிக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அகமதுமுக்லிஸ் மொக்தார் கூறினார்.
சபாக் பெர்ணம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இரண்டு வண்டிகளில் எட்டு பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டு விட்டது. இச்சம்பவத்தில் 20 வயதுக்குட்பட்ட நான்கு உள்ளூர் ஆடவர்கள் காயமடைந்தனர் என்று அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவருக்கு இடது கால், வலது கால் மற்றும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் பின்னர் மேல் நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அகமது முக்லிஸ் கூறினார்.


