சிரம்பான், ஏப். 2- பெண் வாகனமோட்டி ஒருவரை இராணுவ வீரர் ஒருவர் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பை மலேசிய தரைப்படை (டி.டி.எம்.) காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளது.
இத்தகைய சம்பவங்களை தாங்கள் அணுக்கான கவனித்து வருவதாகக் கூறிய தரைப்படைத் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ முகமது ஹபிஸூடின் ஜன்தான், தரைப்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் உறுப்பினர்கள் புரியக்கூடிய இதுபோன்றச் செயல்களை தாங்கள் மிகவும் கடுமையாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.
இதன் தொடர்பான விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்த கருத்துரைக்வோ அறிக்கை வெளியிடவோ நான் தயாராக இல்லை. காவல் துறையினர் தங்கள் விசாரணையை முடிக்கட்டும் என்று பெர்னாமா தொடர்பு கொண்ட போது அவர் குறிப்பிட்டார்.
முப்பந்தைந்து வயதான அந்த இராணுவ வீரர் தற்போது போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது என சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஹாத்தா சே டின் கூறினார்.
மூன்று தினங்களுக்கு முன்னர் இங்குள்ள ஜாலான் பெர்சியாரான் செனவாங் 4இல் நிகழ்ந்த சாலை விபத்து காரணமாக பெண் வாகனமோட்டி ஒருவரை அந்த இராணுவ வீரர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த 28 வயதுப் பெண் பெரேடுவா அக்ஸியா காரில் பயணித்துக்
கொண்டிருந்த போது அந்த இராணுவ வீரர் தன் மனைவி மற்றும் ஏழு வயது மகளுடன் திடீரென சாலையைக் கடந்துள்ளார். இதனால் தவிர்க்க இயலாத நிலையில் அந்த கார் அந்த சிறுமியை மோதியது.


