புத்ரா ஹைட்ஸ், ஏப்ரல் 2: எரிவாயு குழாய் வெடிப்பினால் ஏற்பட்ட தீ விபத்தில், நேற்று மதியம் 3.40 மணி வரை 190 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும், 148 கார்களும் 11 மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்திருப்பதாக, சிலாங்கூர் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குநர் வான் ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
தீ மற்றும் வெப்பம் காரணமாக வீடுகளும் வாகனங்களும் பல்வேறு சேதங்களுக்கு உள்ளாகியதாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் வான் ரசாலி வான் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
முழுமையான துப்புரவு பணிகளுடன் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
100 அடி உயரம் வரை எழுப்பிய தீயின் வெப்பநிலை 1,000 பாகை செல்சியஸ் வரை பதிவு செய்யப்பட்டது.
வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் மற்றும் தரைத்தளம் ஆகியவையும் தீயில் பாதிக்கப்பட்ட நிலையில், சில வீடுகளின் கூரைகள் தீக்கிரையாகின.
--பெர்னாமா


